இயற்கையான முறையில் ஹோம்மேட் டூத் பௌடர் தயரிக்கலாமா? நமது குழந்தைகளின் நலனுக்காக!

தினமும் காலையில் எழுந்தவுடன் நாம் செய்யக்கூடிய முதல் வேலை பல் துலக்குவது தான். இதனால் நம் வாயினுள் உள்ள கிருமிகள் அழிந்து புத்துணர்ச்சி கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீடுகளிலும் டூத் பேஸ்டுகளைத் தான் பயன்படுத்துகிறோம். இன்றைய தலைமுறையினருக்கு பல துலக்குவது என்றவுடன் கண் முன் வருவது பேஸ்ட் தான். கவர்ச்சிகரமான விளம்பரங்களுக்கு அடிமையாகியுள்ளோம் என்றே சொல்ல வேண்டும்.

Praveen Praveen

பல் துலக்குவதற்காக நாம் பேஸ்ட் பயன்படுத்தத் தொடங்கி கிட்டத்தட்ட 30 அல்லது 40 வருடங்கள் இருக்கலாம். அதற்கு முன்பெல்லாம்… இந்தியர்களான நாம் பலவிதமான பொருட்களைக் கொண்டு பற்களை சுத்தம் செய்துள்ளோம்.

“ஆலும், வேலும் பல்லுக்குறுதி.. நாளும், இரண்டும் சொல்லுக்குறுதி..” என்ற நாலடியாரின் பொன்மொழிப்படி அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் ஆலங்குச்சியையும், வேலங்குச்சியையும் தான் பல்துலக்குவதற்காக பயன்படுத்தினார்கள். அதனால் அவர்களது பற்கள் மற்றும் ஈறுகள் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தன. ஆனால், அதே சமயம் கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் நாலடியாரின் கூற்றை புறந்தள்ளிவிட்டு செங்கல், அடுப்புக் கரிச்சாம்பல், தெள்ளு மணல் பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு பல் துலக்க பயன்படுத்தினர். அந்த காலக்கட்டத்தில் தான் கோபால் பல்பொடி, பயோரியா பல்பொடி, கோல்கேட் பல்பொடி என்று அறிமுகமானது. அதன் பின் கால ஓட்டத்தில் இந்தப் பற்பொடி வகைகளும் காலாவதியாகி இப்பொழுது அனைவரும் ஏதோ ஒரு பேஸ்டில் வந்து நிற்கிறோம். அது கோல்கேட், க்ளோஸ் அப், பெப்ஸோடெண்ட், ப்ராமிஸ் என்று எந்தவகை பிராண்டாகவும் இருக்கலாம்.

இவ்வாறு நாம் கண்மூடித்தனமாக பயன்படுத்தும் இந்த வகை பேஸ்டுகள் எல்லாம் நம்மை பற்சொத்தை, பற்குழிகள், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளிலிருந்து காக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். நமது முந்தைய தலைமுறையினரை காட்டிலும் இப்பொழுதுதான் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் மூளை முடுக்கெல்லாம் பெருகியுள்ளது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒரு மாற்றத்திற்கு ஏன் நாமே பற்பொடி தயாரித்து அதை பயன்படுத்தினால் என்ன? என்று யாருக்காவது தோன்றியுள்ளதா!அப்படி தோன்றியிருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை சிரமம் கருதி புறக்கணித்து விடாதீர்கள். ஏனென்றால், டூத் பவுடர் தயாரிப்பது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை. மிகவும் சுலபம் தான்.

இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்துமே இயற்கையான மற்றும் நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் மருத்துவ குணம் நிறைந்த பொருட்களாகும். சரி வாருங்கள்! டூத் பவுடர் செய்வதற்கான பொருட்கள், செய்முறை மற்றும் சிறப்புகள் அனைத்தையும் காண்போம்.

தேவையான பொருட்கள்…

ஹோம்மேட் டூத் பெளடர் தயாரிக்க டிப்ஸ்…
நெல்லிக்காய் பெளடர் – 1 டேபிள் ஸ்பூன்
வேப்பிலைப் பெளடர் – 1 டேபிள் ஸ்பூன்
கிராம்பு பெளடர் – 1 டேபிள் ஸ்பூன்
லவங்கப்பட்டை – 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா/சமையல் உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பிங்க் இமாலயன் சால்ட் – 1 டேபிள் ஸ்பூன்
டீ ட்ரி ஆயில் – சில துளிகள்
புதினா இலை பெளடர் – 1 டீஸ்பூன்

இதன் செய்முறையை பார்ப்பதற்கு முன் நாம் உபயோகிக்கும் பொருட்களின் மருத்துவ குணங்களை முதலில் பார்ப்போம். ஏனென்றால் இப்பொழுது நாம் உபயோகப்படுத்தும் கமர்சியல் டூத் பேஸ்டுகளில் உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்கள் சோடியல் லாரைல் சல்ஃபேட், ப்ரொப்பிலீன் கிளைக்கால், ஃபுளோரைடு மற்றும் செயற்கை இனிப்பூட்டி ரசாயனங்கள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. அவற்றினால் நமது உடலுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் மிக அதிகமாகும். ஆனால் இப்பொழுது நாம் எடுத்துக்கொண்டுள்ள பொருட்கள் அனைத்துமே இயற்கையானது. மருத்துவ குணங்களும் நிறைந்தது. அதன் சிறப்புகள் இதோ:

நெல்லிக்காயில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இது பல் மற்றும் வாயின் உட்புறக்காயங்களை எளிதில் ஆற்றக்கூடியது. அதுமட்டுமல்ல இதன் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி மைக்ரோபியல் குணங்களால் பற்குழிகள் வராமல் காக்கும்.

வேப்பிலையில் இருக்கும் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி வைரல் தன்மையானது வாய்க்குள் இருக்கும் பாக்ட்டீரியாக்களை அழிக்கக் கூடிய திறன் கொண்டது.

அடுத்ததாக கிராம்பு மற்றும் லவங்கப் பட்டை. இரண்டையும் நாம் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றில்லை. பற்பொடி தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம். இரண்டுமே பற்களுக்கு மிகவும் நன்மை செய்யக்கூடியவை. கிராம்பு பல்வலி மற்றும் ஈறுகளில் வலி ஏற்பட்டால் அதைத் தீர்க்கும் திறன் கொண்டது.அதோடு அதன் ஆண்ட்டி செப்டிக் திறன் காரணமாக வாய்க்குள் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை களையும் சக்தி கொண்டது.

லவங்கப் பட்டைக்கு பற்சொத்தை மற்றும் வாய்துர்நாற்றத்தை அகற்றும் திறன் உண்டு. அது மட்டுமல்ல இதன் இனிப்புச் சுவை நாம் செய்யும் பற்பொடியை குழந்தைகளுக்கு விரும்பத் தக்கதாக மாற்றும்.
பேக்கிங் சோடா வாயினுள் உமிழ்நீரில் இருக்கும் அமிலத்தன்மையைக் குறைத்து வாய்துர்நாற்றத்தை அகற்றும். மேலும், பற்களில் படிந்துள்ள கறையை நீக்கி வெண்மையாக்கவும் உதவும்.

உப்பு, வாயினுள் காயங்கள் இருப்பின் அதை ஆற்றும் திறன் கொண்டது. உப்பு உபயகம் கட்டாயமில்லை. உப்பு தேவையில்லை என்று நினைத்தால் அதைத் தவிர்த்து விடலாம்.

இத்தகைய மருத்துவ குணங்களும் சிறப்புகளும் கொண்ட பொருட்களை கொண்டு தான் பற்பொடி செய்ய போகிறோம் என்பதை மறவாதீர்கள்.

செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நமது சமையற்கட்டில் பயன்பாட்டில் உள்ள பொருட்கள் தான். எனவே அவற்றை எடுத்துக் காய வைத்து அரைத்துப் பொடி செய்து கொள்ளலாம். அப்படிப் பொடி செய்தவற்றை மேலே சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு ஒரு பெளலில் இட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். அவ்வளவு தான் இப்போது நீங்கள் விரும்பும் உங்களது டூத் பெளடர் தயார். இந்த டூத் பௌடரை கொண்டு நீங்கள் தினமும் இருவேளை பல்துலக்கி வந்தீர்கள் என்றால் உங்களது பற்கள் பொலிவு பெறுவதோடு வலிமையும் அடையும். மேலும் டூத் பேஸ்டுகளின் பயன்பாட்டால் ஏற்படும் பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம். ஆகையால் இனிவரும் காலங்களில் நமது குழந்தைகளின் நலனுக்காக நமக்கு தேவையான பற்பொடிகளை மேற்கூறிய முறைப்படி நாமே தயாரித்து பயன் பெறுவோம்.